×

கர்நாடகா தேர்தலில் பாஜகவிற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது- நாராயணசாமி

 

பழனி முருகன் கோவிலில் பாண்டிச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். ரோப்கார் மூலமாக மலை மீது சென்று நாராயணசாமி  சாயரச்சை பூஜையில் கலந்துகொண்டு ராஜ அலங்காரத்தில் இருந்த முருகனை தரிசனம் செய்தார். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “கர்நாடக மாநில மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என விரும்பி வாக்களித்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு சாவு மணி அடித்துள்ளனர். இனி வரும் காலங்களில் சத்தீஸ்கர் மாநிலம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடியின் உடைய மோடி மேஜிக் போன்ற ஜால வார்த்தைகள் எல்லாம் இனி எடுபடாது, பாரதிய ஜனதா கட்சியின் அஸ்தமனக்காலம் உருவாகியுள்ளது. 

பாண்டிச்சேரி மாநிலத்தில் நிர்வாகம், சட்ட ஒழுங்கு சீர் கெட்டுப் போய் உள்ளது, முதலமைச்சர் ரங்கசாமி தனது அதிகாரத்தை துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் ஒப்படைத்துவிட்டு டம்மி முதலமைச்சராக உள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் உயிரிழந்து உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தான் இந்த கள்ளச்சாராயங்கள் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து 25 பேர் இதற்கு காரணமாக புதுச்சேரியைச் சார்ந்தவர்கள் காரணமாக இருந்தனர் என்பதை எண்ணி புதுச்சேரி மக்கள் விக்கி தலை குனிய வேண்டும். 25 பேர் உயிரிழப்புக்கு பாண்டிச்சேரியை சார்ந்தவர்கள் காரணமாக இருந்ததை நான்  அவமானமாக  கருதுகிறேன். பாண்டிச்சேரியில் தரம் கெட்ட ஊழல் நிறைந்த நிர்வாகம் நடைபெறுவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. வெகுவிரைவில் ரங்கசாமியின் அரசை மக்கள் வீட்டிற்கு அனுப்பும் காலம் வரும்” என்றார்.