×

புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்

 

புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த பின்னர் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ இந்த ஆண்டு ரூ.11,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம். முக்கியமாக வேளாண்மையில் கவனம் செலுத்தியுள்ளோம். நிலம் குறைவு என்றாலும் விவசாயத்தில் உற்பத்தியை பெருக்குவது மிகவும் அவசியம். நமது மாநிலத்தில் நல்ல கல்வியை கொடுக்கின்றோம். அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். சேதராப்பட்டில் உள்ள 750 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளோம். அதில் புதிய தொழிற்சாலைகள், மருத்துவ பூங்கா போன்றவை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கின்ற அரசு காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் நடத்த வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது. எம்எல்ஏக்களின் கோரிக்கைபடி இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம். காரைக்காலில் திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும். ஊக்கத்தொகை ரூ.12,500 சேர்த்து ரூ.20 ஆயிரமாக கிடைக்கும். இதற்காக 4,119 ஹேக்டேர் கணக்கிடப்பட்டு, 5,137 விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பிற அறுவை சிகிச்சை உள்ளட்டவைகளுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் செல்லும் போது அதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் சான்றிதழ்படி முதல்வர் ஒப்புதலோடு மருத்துவ செலவு திரும்ப வழங்கப்படும். இற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்படும். புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம். விதவை பெண்களின் உதவித்தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.