×

“இது மார்கழி மாசம்... கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டாம்”- பாஜகவினருக்கு விபூதி அடித்த முதல்வர்

 

வருகின்ற சட்டமன்ற தேர்தலில், மீண்டும் கூட்டணி வைத்து கொள்ளலாம் என்று நிதின் நபின் கேட்டார். இது மார்கழி மாதம் என்பதால், தை மாதம் பேசிக்கொள்ளாம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நிபின் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார்.  பொறுப்புக்கு வந்தபிறகு புதுச்சேரியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் முதலாவதாக பங்கேற்றார். இன்று காலை முதல் அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க கோரிமேட்டில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார். அங்குள்ள அப்பா பைத்தியசாமி கோயில் வாசலில் நின்று முதல் அமைச்சர் ரங்கசாமி வரவேற்றார். கோயிலுக்குள் அழைத்து சென்றார். அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி பூஜை செய்தார். சாமி தரிசனம் செய்தார். பிரசாதம் வழங்கினார். அவருடன் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், மாநிலத்தலைவர் வி.பி.ராமலிங்கம், பேரவைத்தலைவர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.


அங்கு முதல்வர் ரங்கசாமியும் நிதின் நிபின் மற்றும் மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில், மீண்டும் கூட்டணி வைத்து கொள்ளலாம் என்று நிதின் நபின் கேட்டார். இது மார்கழி மாதம் என்பதால், தை மாதம் பேசிக்கொள்ளாம் என்று ரங்கசாமி தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமி வீட்டில் அவருடன் பாஜக தலைவர்கள், சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் நிதின் நபின் வெளியே சென்றார். அதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரி வளர்ச்சி பற்றி பேசிட்டு இருந்தோம். புதுச்சேரி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேவையான நிதியை பெற எந்தெந்த துறைகளில் என்னென்ன செயலாம் என ஆலோசித்தோம். இது தேசிய ஜனநாயக கூட்டணி. புதுச்சேரி மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துகிறோம். இப்போது தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி நடக்கிறது நன்றி என்றார். அப்போது விஜய்யுடன் செல்கிறீர்களா?, பாஜக அமைச்சர் ஜேசிஎம் உடன் இருக்கிறார்களே, கூட்டணி தொடருமா என்ற கேள்விகளுக்கு அவர் பதில் தரவில்லை.