புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர்காங். 16, பாஜக 14 இடங்களில் போட்டி
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் கூட்டணியிலுள்ள அதிமுக, லஜக கட்சிகள் 14 இடங்களில் போட்டியிடும். கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார். புதுச்சேரியில் தவெகவுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை என்றார்.
இது தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசினார். வரும் தேர்தலில் பிரதமர் மோடி வழிகாட்டுதல், மேம்பாட்டு பணிகள், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்துள்ள பணிகளை வைத்து அடுத்து தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சந்திக்கிறோம். கடந்த 25 ஆண்டுகளில் செய்ய முடியாத திட்டகள் இந்த 5 ஆண்டுகளில் நடந்துள்ளது என்று மக்கள் பேசி கொள்கின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் கடந்த தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்டனர். பாஜக தரப்பில் ஒதுக்கப்பட்ட 14 இடங்களில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து போட்டியிட்டோம். கடந்த தேர்தலில் இருந்த அதே நடைமுறை இம்முறை தொடரும். எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது ஓரிரு நாட்களில் இறுதி செய்து விடுவோம், என்றார். தொடர்ந்து பேசிய அவர் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சி என்.ஆர்.காங்கிரஸ். இதர கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து ஒருங்கிணைத்து போட்டியிடுகிறது. லட்சிய ஜனநாயக கட்சி எங்கள் கூட்டணிக்கு வருகிறது.
கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி வர முதல்வர் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் பேசவில்லை. கடந்த முறை 4 எம்எல்ஏக்கள் இருந்ததால் 5 இடங்கள் ஒதுக்கினோம். இம்முறை பேசி முடிவு எடுப்போம். பாஜக கூட்டணியில் லஜக, அதிமுகவுக்கு சீட் ஒதுக்குவோம். காங்கிரஸை இரண்டு இடங்களுக்கு கொண்டு வந்தவர் நாராயணசாமி. ஏற்கெனவே அவர் கேள்விகளுக்கு மக்கள் பதில் அளித்துவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உள்ளது போன்று புதுச்சேரியிலும் தொடரும். புதுச்சேரியில் தவெகவுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை அமலாகும் முன்பு தெரிவித்து விடுவோம். கூட்டணியிலுள்ள பாமக கடந்தமுறை தொகுதி கேட்கவில்லை. இம்முறை இதுவரை ஏதும் புதுச்சேரியில் கேட்கவில்லை” என்றார்.