×

ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியதன் காரணத்தை வெளியிடுங்கள்- அண்ணாமலை

 

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். 

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையின் படி,  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டத்தை திமுக நிறைவேற்றியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பினார். இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த நிலையில், மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.  

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை,  “ஆன்லைன் ரம்மி விளையாட்டை பாஜக எதிர்க்கிறது. இதுதான் கட்சியின் நிலைபாடு.  இந்த மசோதாவை சரி செய்து திருத்தி கொடுங்கள். ஆளுநர் கூறிய திருத்தங்களை செய்யாமல் அப்படியே ஆளுநருக்கு அனுப்பாதீர்கள். இந்த சட்டம் தவறான சட்டம். மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் ஆளுநர் நிச்சயம் கூறியிருப்பார்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் காரணத்தை வெளியிடுங்கள். காரணத்தை வெளியிட்ட பின் மக்களே முடிவு செய்யட்டும். யாரையோ சமாதானம் படுத்துவதற்காக தவறான சட்டத்தை கொண்டு வந்து ஆளுநரிடம் கையெழுத்திட நிர்பந்திக்க முடியாது. டெல்லி மதுபான ஊழல் திமுகவினருக்கு ஏன் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரியவில்லை. டாஸ்மாக்கை தவறாக பயன்படுத்தினால் அமலாக்கத்துறை விசாரிக்கும் என அஞ்சுகிறதா திமுக?” எனக் கூறினார்.