×

பெட்ரோல் கேனுடன் பொதுமக்கள் போராட்டம்! புதுக்கோட்டையில் பரபரப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுகோட்டை அருகே குளவாய்பட்டியில் அமையவிருக்கும் புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இயங்கி வந்த கல்குவாரிக்குல் பொதுமக்கள் பெட்ரோல் டீசல் கேனோடு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை அருகே குளவாய்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் விவசாயத்தை நம்பியும் கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் குளத்திற்குச் செல்லும் வாரியை தனியார் கல்குவாரி ஆக்கிரமிப்பு செய்து 200 அடி ஆழத்திற்கு சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் கனிம வளத்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்குவாரி அருகே 100 மீட்டர் தூரத்தில் மற்றொரு கல் குவாரி அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த குவாரி சம்பந்தமாக பொதுமக்கள் கருத்துக்களை கேட்பதற்காக கீரனூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல்துறையினர் கல்குவாரிக்கு ஆதரவாக பேசியதாகவும் கல் குவாரி சம்பந்தமாக பொதுமக்கள் தலையிட்டால் அவர்களை கைது செய்வோம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு செல்லும் முன்பு தொலைபேசியை  வாங்கி வைத்துக்கொண்டு அதற்குப் பின்னரே ஆலோசனை கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து கலந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஏற்கனவே  குளவாய்பட்டியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான கல்குவாரிக்குள் பொதுமக்கள் உட்புகுந்து பெட்ரோல் டீசல் கேனுடன்  கல்குவாரிக்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு குளவாய்பட்டி கிராமத்தில் புதியதாக கல்குவாரி அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் அவ்வாறு ரத்து செய்யாவிட்டால் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை கொண்டு தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்வோம் என்றும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் மற்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குளவாய்ப்பட்டி கிராமத்தில் கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் டீசல் கேனுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.