×

 மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்?!

 

நடப்பு கல்வியாண்டில் மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா  தொற்று பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. இருப்பினும் முன்பைவிட தொற்று எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதால் ,அதை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததன் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.  இதையடுத்து மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற பெற்றோர்களின் அச்சத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் , நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் பண்டிகை காலம், பருவமழைவிடுமுறை என தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் வருவதால் பாடத்திட்டங்கள் முழுமையாக நடத்தப்படாததால், தேர்வுகள் முறையாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு மே முதல் வாரத்தில் நடத்த  பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளின் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை பொதுத்தேர்வானது வழக்கம்போல் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடைபெறாமல் ,மே மாதம் முதல் வாரத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.