×

100% கல்வி அறிவு பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்வரின் இலக்கு- பழனிவேல் தியாகராஜன்

 

தமிழ்நாட்டில் 100 சதவிகிதம் கல்வி அறிவு பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்வரின் இலக்கு என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில எச்டிஎப்சி தனியார் வங்கியின் பரிவர்தன் திட்ட மூலம் 97 மாணவ, மாணவிகளுக்கு 32 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தின் இருமொழிக்கொள்கை இப்போதும் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பொருளாதார ரீதியாகவும் இருமொழிக்கொள்கை அவசியமானதாக உள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கும், பணிக்கும் இருமொழிக்கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் ஆங்கிலத்தையும் சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் நிதியமைச்சராக இருந்த போது மாநில வங்கி குழு கூட்டத்தை முறையாக நடத்தி, அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினே. ஏழை, எளிய மக்களை முன்னேற்ற கல்வி மட்டுமே முதல்பாதை. கல்வியே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு தெளிவான பாதையை காட்டும். கல்வியினால் வரும் முன்னேற்றம் மற்றும் பாதுபாப்பு வேறு எதிலும் வராது. என்னை போன்று சொத்து நிறைய உள்ள குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியால் வரும் முன்னேற்றம் வேறு எதிலும் கிடைக்காது. கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் தான் நானும் எனது குடும்பமும் இந்த நிலையில் உள்ளோம். அதனால் தான் மக்கள் சேவையும் செய்து வருகிறோம். சமுதாயத்தில் அனைவரும் கல்வி கற்றால் மட்டுமே சிறப்பான வளர்ச்சியை ஒரு மாநிலம் பெற முடியும்.

பொருளாதார ரீதியாக முன்னேறிய குஜராத் மாநிலத்தில் இருந்து அதிகம் பேர் ஒரு நாட்டுக்கு சட்ட விரோதமாக செல்வதற்கு தள்ளப்பட்டார்கள் என்றால் அந்த சமுதாயத்தில் வாய்ப்புகள் சமமாக வழங்கவில்லை என்று தான் நாம் கருத வேண்டும். மற்ற மாநிலங்களில் 18 வயதில் பள்ளி கல்வி அறிவு பெற்றவர்கள் 50 சதவிகிதமே உள்ளனர். தமிழ்நாட்டில் 90 சதவீதம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 100 சதவிகிதம் கல்வி அறிவு பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்வரின் இலக்கு. அந்த சாதனையையும் முதல்வர் செய்து முடிப்பார்” என பேசினார்.