வரும் 12-ந்தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் ..!
இஸ்ரோ தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-
பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட்டை வருகிற 12-ந்தேதி காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏவுதலை ஏவுதல் காட்சிக் கூடத்தில் இருந்து பொதுமக்கள் பார்க்க ஆன்லைனில் lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட மேம்பட்ட புவி கண்காணிப்பு-ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என்1 (அன்வேஷா ) விண்ணில் ஏவப்படுகிறது. இது படமெடுக்கும் செயற்கைக்கோள் ஆகும்.
மேலும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோள் மற்றும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.