×

ஓபிஎஸ் மகன் அலுவலகம் முற்றுகை! தேனியில் பரபரப்பு

 

சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாத தேனி பாராளுமன்ற அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், அவருக்கு எதிராக  கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒன்றிய பாரதிய ஜனதா மோடி அரசாங்கம் தொடர்ந்து சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துளது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் மக்களுக்காக  குரல் எழுப்பி விலை உயர்வை வலியுறுத்தாத தேனி  அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்தின் பெரியகுளம் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக வைகை அணைச்சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன் இருந்து பேரணியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டிக்கும் விதமாகவும், சமையல் எரிவாயு சிலிண்டரை தோளில் சுமந்தவாறு பேரணியாக சென்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாத ஓ‌.பி. ரவீந்திரநாத்தை கண்டித்தும்,  பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பெண்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மேலும் இந்த முற்றுகை போராட்டத்தால் தேனி- திண்டுக்கல் சாலையில் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.