×

“அதிமுகவினரை விலைபேசி வருகின்றனர்”-  செங்கோட்டையனின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்

 

ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராமஜெயலிங்கம் ஆகியோரின் உருவப்படத்தை திடீரென அதிமுகவுணர் எரித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தலைமையில் அதிமுகவினர் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து கழகத்தில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி கடைவீதியில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஜெயங்கொண்டம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் ஆகியோரின் உருவப்படத்தை, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராஜா ரவி தலைமையிலான அதிமுகவினர் எரித்து கோசமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர் தெரிவிக்கையில், செங்கோட்டையன் இதற்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்து தற்போது த.வெ.க.வில் அமைச்சராக உள்ளார். அவர் தற்போது அதிமுகவினரை அக்கட்சியில் சேர்த்து அதிமுக என்ற கட்சியை இல்லாத தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார். குதிரை பேரம் நடத்தும் ஆட்சியில் அதிமுகவினரை விலைபேசி வருகின்றனர். உண்மையான தொண்டர்கள் யாரும் எடப்பாடி யார் பக்கம் தான் உள்ளனர். ஆனால் சில துரோகிகள் சந்தர்ப்பவாதிகள் விஜய் கட்சியில் இணைந்து வருவது அதிமுக தொண்டர்களை அசைத்துப் பார்த்து விடலாம் என்று எண்ணுகின்றனர் அது நடக்காது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் செங்கோட்டையன் மற்றும் ராமஜெயலிங்கம் உருவ படத்தை எடுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடியார் தான் வருவார் என்றார். 

உருவ படத்தை எரித்த அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராஜா ரவி என்பவர், த.வெ.க.வில் இணைந்த ஜெயங்கொண்டம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராமஜெயலிங்கத்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. மைத்துனராக இருந்த போதிலும் கட்சி வேறு, கொள்கை வேறு என்ற அடிப்படையில் உருவ படத்தை அவர் எரித்ததாகவும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தி உள்ளது.