×

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையில்  ஊர்வலம்..!

 

இஸ்லாமியர்களின் இறைதூதராக போற்றப்படும் முகமது நபி (நபிகள் நாயகம்) அவர்களின் பிறந்த நாள் இன்று மீலாடி நபி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இன்று கோவை கோட்டைமேடு பகுதியில் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. புத்தாடைகள் அணிந்த சிறுவர், சிறுமிகள் மத நல்லிணக்கம், உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அமைதி பேரணியாக சென்றனர்.

"சமூக ஒற்றுமையை காப்போம்" ,"சகோதரத்துவத்தை போற்றுவோம்", "மதுவை ஒழிப்போம்", "வரதட்சணையை ஒழிப்போம்"  என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிறுவர்,சிறுமியர் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிகழ்வில் ஊர்வலமாக வந்த குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகள்,குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்து, சமூகங்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று மீலாடி நபி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது தொடர்ந்து நடைபெறுகிறது.