இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்..!
தமிழக அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் விரிவுபடுத்தப்படுவதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று (செப்.29) நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தைத் தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், "தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இந்த அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 02-ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாப் பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்ச வரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்" என்று சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செப்.28) தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படும் நிலையில் தனியார் பேருந்துகளிலும் அதே நடைமுறையைச் செயல்படுத்தாவிட்டால் தனியார் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும்.
இதனால் தனியார் பேருந்துகளைச் சார்ந்துள்ள சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தனியார் பேருந்துகளிலும், பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இலவசப் பயணத்தால் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகளுக்கு மானியத்தை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செப்.30-ஆம் தேதி நள்ளிரவு 12.01 முதல் இரவு 11:59 வரை 24 மணி நேரம், மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம்" என்று அறிவித்துள்ளார்.