சேலத்தில் தனியார் பஸ் ஓட்டுநர்கள் போராட்டம்..!!
முதலமைச்சர் விஜய் நேற்று சட்டசபையில் அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் பெண்கள் இனி மாநகர, நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் ஆகிய அரசு பஸ்கள், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (மப்சல்) பஸ்கள், மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பெண்களின் இலவசப் பயணத் திட்ட விரிவாக்கத்துக்கு தனியார் பஸ் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களின் இலவச பயணத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் தனியார் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகளிர் இலவச பயணத் திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் போய்விடும் என்று அவர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.