×

சிறையில் கைதிகள் பொங்கல் கொண்டாட்டம்! 

 

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பொங்கல் கொண்டாட்டப்பட்டது. கைதிகள் நடனமாடியும் யோகா மற்றும் சிலம்பம், உறியடி என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டும் அசத்தினார்கள்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 400க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவர்களது மனம் மாற்றத்தை கருத்தில் கொண்டு சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தை பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தண்டனை மற்றும் விசாரணை ஆண், பெண் கைதிகள் பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து கைதிகள் நடனம், யோகா,மற்றும் சிலம்பம்,உறியடி, வாத்து பிடித்தல், கரும்பு தின்னுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு சிறைத்துறை ஐஜி சிவராஜ் மீனா, தலைமை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் சிறை கைதிகளை மகிழ்விக்கும் வகையில் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை பழனிவேலு தலைமையிலான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.