சிபிஎஸ்இ அனுமதி பெற்றுள்ளதாக கூறி PRIME PUBLIC பள்ளி மோசடி- தேர்வு எழுத முடியாமல் நடுத்தெருவில் நிற்கும் மாணவர்கள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 8ஆம் வகுப்பு வரையே CBSE அப்ரூவல் பெற்று, 10ஆம் வகுப்பு வரை உள்ளதாக மோசடியில் ஈடுபட்ட PRIME PUBLIC பள்ளியால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பிரைம் என்ற தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 19 மாணவர்கள் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வந்த நிலையில், அவர்களுக்கு நாளை தேர்வு தொடங்க இருந்தது. ஆனால் இதுவரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கேட்டும் ஹால்டிக்கெட் வந்துவிடும் என பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை, எனவே தனி தேர்வளராக மாணவர்களை தேர்வு எழுத வைக்க உள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தனி தேர்வராக தேர்வு எழுதக்கூடாது என்றும், மாணவர்கள் நாளை தேர்வு எழுத வேண்டும் என்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுடன் காத்துக் கிடந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கும்பகோணத்தில் நடைபெற்று வரும் வேளாண் பட்ஜெட் கருத்து கேட்கும் கூட்டத்தில் இருப்பதால், மாவட்ட DEO, CEO அதிகாரிகளுடன், மாணவர்களின் பெற்றோர்கள் - பள்ளியின் தாளாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் தான் அந்த பள்ளிக்கு எட்டாம் வகுப்பிற்கே அங்கீகாரம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து நாளை நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 19 மாணவர்களும் எழுத முடியாது என்பது உறுதியாகிவிட்டது. மேலும், வேறொரு பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வாங்கி National institute of Open School என்ற திட்டத்தில் வரும் மார்ச் மாதம் விண்ணப்பம் செய்து ஜூன் மாதம் தேர்வு எழுத முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்த நிலையில் கடந்த வருடம் இந்த பள்ளியில் 15 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த மாணவர்கள் தேர்வு குறித்து தற்போது அச்சம் எழுந்துள்ளது.