லைஃப் டைம் சாதனையாளர் விருது வென்ற பிரதமர் மோடி - காங்கிரஸ் கிண்டல்..!
நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.19,650 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் விமான போக்குவரத்து திறனை மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்து சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நேற்று விமான நிலையத்தை திறந்து வைத்து, புதிதாக கட்டப்பட்ட இடத்தில் நடந்துசென்று பார்வையிட்டார்.
புதிய விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச வழித்தடங்கள் தொடங்க திட்டமிடப்படுள்ளது. தற்போது இங்கு நான்கு முனையங்கள், இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. மேலும் ஒரு பிரத்யேக விவிஐபி முனையமும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுமானம் 2026 தொடங்கி 2030 ல் நிறைவடையும்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அதானிக்கு ஷீல்ட் கொடுக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
அந்த புகைப்படத்தில், மோடிக்கு அதானி ஷீல்ட் கொடுப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு, அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது மோடிக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மோடியின் அர்ப்பணிப்பு அதானி குழுமத்தை மென்மேலும் வளர செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான அரசு திட்டங்களின் டெண்டர்கள் அதானிக்கு வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே. தாராவி மறுக்கட்டுமான திட்டம், பழங்குடியினர் மற்றும் சுற்றுசூலை பாதிக்கும் என விமர்சனத்துக்குள்ளாகும் கிரேட்டர் நிகோபார் திட்டம் உள்ளிட்டவை அதானி குழுமம் வசம் செல்வதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி வருகிறது.
மேலும் அண்மையில் அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது அதானிக்கு நிவாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.