தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி..! கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்..!
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமித்ஷா திருச்சி வந்து சென்றார். அப்போது பொங்கலுக்கு முன்பாக அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகளை முடிக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணியிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற பா.ம.க. தலைவர் அன்புமணி தரப்பு, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. இதற்கிடையே இந்த மாத இறுதிக்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை இறுதி செய்வதில் பா.ஜ.க. தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. அதாவது, இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளாராம். அனேகமாக, 28-ம் தேதி அவர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்து கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, கூட்டணியை இறுதி செய்வதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.