பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்..!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள X தள பதிவில், 'பொது வாழ்வில் உள்ள அண்ணாமலை பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பதும் அளிக்காமல் கடந்து செல்வதும் அவர் உரிமை. ஆனால் கமலாலயத்தில் ANI செய்தியாளரை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளது முறையல்ல. அவரை வன்மையாக கண்டிக்கிறோம்' என கூறியுள்ளது.
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் பா.ஜ.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்தின் செய்தியாளரிடம் நடந்து கொண்டிருக்கும் முறை எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. அண்ணாமலை, செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பேசுவதும், அவர்களது பணியை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், தன் உடல்மொழியால், பேச்சுமுறையால் எதிரில் இருக்கும் செய்தியாளர்களை அச்சுறுத்துவதும் இது முதல் முறை அல்ல. பலமுறை கண்டனத்திற்கு உள்ளான பிறகும், அண்ணாமலை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதது, அவர் இன்னும் ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்ல, பொதுவாழ்க்கைக்கும் பக்குவப்படவில்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த போக்கை அவர் கைவிட வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மீண்டும் ஒருமுறை கவனத்துடன் சுட்டிக்காட்டுகிறது.
இந்த நேரத்தில் செய்தியாளர்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் மீண்டும் ஒரு நினைவூட்டலை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் முன்வைக்கிறது. போட்டி நிறைந்த துறையாகிவிட்டதால், ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள், இது போன்ற நபர்களை திரும்பத்திரும்ப நிறுவனங்களின் கட்டாயத்தின் பேரில் பேட்டி காண வேண்டி வருகிறது. அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்புகள் அல்லது முன்கூட்டியே பேட்டிக்கான செயல்திட்டத்தை முடிவு செய்துவிட்டு, செய்தியாளர்களை தங்களது நிறுவனங்கள் இது போன்ற அரசியல் கட்சி பிரமுகர்களை பேட்டி காணும் நிகழ்வை திட்டமிட வேண்டும். மாறாக அரசியல் கட்சியினர் செல்லுமிடமெல்லாம் செய்தியாளர்கள் சென்று மைக்கை நீட்டி கருத்து பெற வேண்டும் என்கிற ஊடக அறநெறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை முற்றிலுமாக நிறுத்த செய்தி நிறுவனங்கள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
மேற்கண்ட முடிவே இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளையும், ஊடகங்கள் மீதான எதிர்மறையான விரும்பத்தகாத விமர்சனங்களையும் தவிர்க்க வாய்ப்பளிக்கும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மீண்டும் வலியுறுத்துகிறது. ’அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்ந்து 24 மணி நேர ஊடகங்கள் தங்களது ரேட்டிங் போட்டிக்காக பத்திரிகையாளர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதையும் மன்றம் சுட்டிக்காட்டுகிறது. ’யாகாவாராயினும் நா காக்க’ என்று சொல்லும் அதே நேரத்தில், ’மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்பதையும் ஊடகங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என நினைவூட்டுகிறோம்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.