டில்லியில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!
நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று (ஜனவரி 26) கோலாகலமாக நடந்தது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து திரவுபதி முர்மு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் டில்லியில் உள்ள கடமை பாதையில் திரவுபதி முர்மு மூவர்ண கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நாட்டின் ராணுவ பலம், கலாசாரம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு துறை சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் இடம் பெற்றிருந்தன. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முக்கிய பங்கு வகித்து ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் அணிவகுப்பு நடந்தது.
முன்னதாக, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் வரவேற்பு அளித்தனர்.