×

கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார். 
 
கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி  முர்மு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். காலை 9 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மைதானத்தில் வந்து இறங்கினார். கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
 

 அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சென்று,  தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று  பார்வையிடுகிறார். பின்னர் திருவள்ளுவர் சிலையை பார்வையிடும் அவர், பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு  அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.  குடியரசுத் தலைவரின்  வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  அதன்படி,  கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு  செல்ல  சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடபடிக்கையாக  கன்னியாகுமரியில் டிரோன்கள் பறக்கவும்  தடை விதித்து போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.