“எங்கு பார்த்தாலும் தேமுதிக கூட்டணி குறித்து தான் பேச்சு” - பிரேமலதா
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக தேமுதிக கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிகவின் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தேர்தல் எதிர்கொள்வது தொடர்பாக பூத் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தற்போது கோட்டை முதல் குமரி வரை தமிழ்நாடு முழுக்க தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருளாக உள்ளது. ஆனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியில் இடம்பெறுவோம். கூட்டணி அறிவிப்பு உங்களை கொண்டாட வைக்கும். நமக்கு கிடைத்த தகவலின்படி பிப்ரவரி கடைசி வாரம் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடவுள்ளனர். மார்ச் 10ஆம் தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு தேர்தல் நடத்துவுள்ளார்கள். இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்கட்டமே தமிழ்நாட்டிற்குதான் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒரு வருடமாக மாவட்டச் செயலாளர்களை தயார்படுத்தி 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்துள்ளோம். தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.