தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை- பிரேமலதா
நாகர்கோவில் மாநகரில் இல்லம் தேடி இல்லம் நாடி தேமுதிக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “மிக முக்கியமான நாள் தைப்பூசம். உங்க எல்லாருக்குமே ஒரு ஒரு விசேஷமான நாள். தமிழ்நாட்டில இல்ல உலகம் முழுதும் இருக்கிற முருகர் ஆலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று முருங்கரை தரிசிக்கக்கூடிய நாள். இந்த நல்ல நாளிலே நாகர்கோவில் இங்கு வந்திருக்கின்ற அத்தனை பேருக்கும் என்னோட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முருகப் பெருமானின் ஆசீர்வாதம் எல்லாருக்கும் கிடைச்சிருக்கு. இந்த ஆலோசனைக் கூட்டமும் மிகச் சிறப்பாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
தேர்தலை நோக்கி வருகின்ற இந்த பட்ஜெட் மிக மிக முக்கியமான ஒரு பட்ஜெட். ஒன்பதாவது முறையாக ஒரு பட்ஜெட் வாசிச்சிருக்காங்க நிர்மலா சீதாராமன் அவர்கள். பெண் நிதி அமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ்நாட்டிற்கு சென்னை- கோயம்பத்தூர், சென்னை- கொல்கத்தா போன்ற நிறைய ரயில்வே டிராக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 40,000 கோடி பயோ ஆர்கானிக் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சாலை வசதி, இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவுளிகளுக்கு பூங்காக்கள் அமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம், ஐடி இண்டஸ்ட்ரீஸ் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்றவைகளை எல்லாம் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் நதிகள் இணைப்பு, நீர் மேலாண்மை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஜிஎஸ்டி, டிடிஎஸ் போன்ற வரிகளுக்கு விலக்கு இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. விலைவாசி கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு இல்லை. யானை பசிக்கு சோளப்பொறி தான் இந்த பட்ஜெட். தேமுதிக தனித்து நின்று தேர்தலை சந்திக்காது. நிச்சயமாக கூட்டணி அமைக்கும். தமிழ்நாட்டில் மூன்றாவது அணி பற்றி இப்போது சொல்ல முடியாது. விஜய் மீதான அதிமுகவின் தாக்குதல் பற்றி விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தை கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து பேசித்தான் முடிவு எடுக்கப்படும்” என்றார்.