×

“சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டியே நிலவ வாய்ப்பு”- பிரேமலதா விஜயகாந்த்

 

தேமுதிக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  இன்று  குற்றாலம்  குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “குற்றால அருவியின் மேல்பகுதியில் செண்பகாதேவி அருவி அருகே அணை கட்டினால் குற்றால அருவிகளில் வருடம் முழுவதும் தண்ணீர் விழுவதற்கான சாத்திய கூறு உள்ளதால் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தர வாய்ப்புள்ளது. நாங்கள் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் இந்த கோரிக்கை முன் வைப்போம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு  மிகவும் சீர்குலைந்து இருக்கிறது. நேற்று சென்னையில் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை அனுபவதித்து வருகின்றன. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய சூழலில் 4 முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தேமுதிக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடாது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சரியான நேரத்தில் சரியான கூட்டணி அமைத்து கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.