☰
×

"EVM வேண்டாம்... பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த்

 

தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் SIR அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக அனைவரின் கருத்தாக இருக்கிறது. எனவே வாக்காளர் திருத்தப் பட்டியல் SIR ஐ முறையாக வெளிப்படை தன்மையோடு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதற்கோ, அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கோ இடமளிக்கக் கூடாது. மேலும், தேர்தல் நடைமுறையில் மக்களுக்கு முழுமையான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் ஏற்படும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமான EVM முறையை தவிர்த்து, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேர்தலில் பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, மக்கள் அளித்த வாக்கு எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி துல்லியமாக எண்ணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளில் தகுதியான வாக்காளர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதுடன், எதிர்காலத் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வந்து ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.