“மேட்டூர் அணை திறந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லை”- பிரேமலதா விஜயகாந்த்
நெசவாளர்களுக்கு உதவி, ஊக்க தொகையை அரசு வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ, “மேட்டூர் அணையில் இருந்து இன்றுதான் முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைத்திருக்கிறார். இது மிக மிகக் காலதாமதம். சில பகுதிகளுக்குத் தண்ணீர் செல்ல ஒரு வார காலம் ஆகும். தண்ணீர் வந்து அவர்கள் எப்போது பயிர் செய்வார்கள்? ஏற்கனவே பயிர்கள் நீரில்லாமல் காய்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே, விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பழைய ரக சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
கைத்தறி நெசவிற்கு அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விருத்தாசலம் தொகுதியில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தை உரம் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் நம்பியிருக்கும் சுமார் 4 லட்சம் நெசவுத் தொழிலாளர்களின் கூலி முறையை ஒழுங்குபடுத்த, இதுவரை அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படவில்லை. எனவே, இதற்கான தனி அரசாணையை அரசு உடனே பிறப்பிக்க வேண்டும். சேலம் இளம்பிள்ளையில் டெக்ஸ்டைல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் உப்பளங்களை பாதிக்கும் வகையில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுகிறது.ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் பாதுகாக்கப்படுவதைப் போல, உப்பு உற்பத்தியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.