×

“சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது  இல்லை அரசாங்கம்”-  பிரேமலதா விஜயகாந்த்

 

த.வெ.க அரசு அமைந்து 3 மாதங்களாகியும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “த.வெ.க அரசு அமைந்து 3 மாதங்களாகியும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை. சினிமா பார்த்துக் கொண்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு சீன் போடுவது அரசு கிடையாது. மக்கள் வாழ்வாதார பிரச்சனை என்பது சினிமா அல்ல, சீன் போடுவதற்கோ, ரீல்ஸ் போடுவதற்கோ, போட்டோ ஷூட் எடுப்பதற்கோ கிடையாது. த.வெ.க ஆட்சி அமைந்த பின்னர் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை த.வெ.க அரசு நிறைவேற்ற வேண்டும். த.வெ.க ஆட்சியில் காவல் மரணங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம் நிகழ்ந்துள்ளது. இவை தடுக்கப்பட வேண்டும். எந்த காவல்துறைக்கும் ஒருவரை அடித்துக் கொல்லும் உரிமை எந்த சட்டத்திலும் கிடையாது.” என்றார்.