×

2026 தேர்தலில் தேமுதிக மக்கள் விரும்பும் கூட்டணியை அமைக்கும்- பிரேமலதா விஜயகாந்த்

 

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, மக்கள் விரும்பும் கூட்டணியை அமைக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் இன்று இரவு ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வரலாற்றில் தேமுதிக ஓர் மகத்தான இடத்தை பெறும். இந்த தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் அவ்வாறு கூட்டணி அமைத்து வெற்றி பெறும்போது மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கும். ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்துக்கு பயன்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். அவ்வாறு இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

விவசாயமும், நெசவும் தமிழகத்தின் இரண்டு கண்கள் இந்த இரண்டு தொழிலும் நன்றாக இருக்க வேண்டும். நெசவுத் தொழிலில் பிரச்சனை வந்த போது விஜயகாந்த்  10 லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்கி கிடந்த சைத்தறி துணிகளை வாங்கி தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கினார். ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிக மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.