“இனி விஜய் பற்றி கேட்க வேண்டாம்”- பிரேமலதா விஜயகாந்த்
விஜய் தனித்து நின்றால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதேபோல் 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார். வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி தற்போது கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது. 2026-ல் தேமுதிக இணையும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜய் பற்றியோ, கூட்டணி பற்றியோ இனி என்னிடம் பத்திரிக்கையாளர் கேட்க வேண்டாம். பல முறை அதற்கு பதில் சொல்லிவிட்டேன்.
தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாகவே தான் செயல்படுகிறது. வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா முழுக்க சீர்திருத்தம் செய்ய வேண்டும். வாக்கிற்குப் பணம் கொடுப்பது, வாக்குத் திருட்டு, கள்ள ஓட்டு எல்லாமே சரி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வருகிறது என்றவுடன் புதிது புதிதாக சொல்லி வருகின்றனர். தேமுதிகவிற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அமெரிக்க விதித்த கூடுதல் 50 சதவீத வரி விதிப்பானது ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவிடம் பேசி, சரி செய்து நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” என்றார்.