×

அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கிறதா?- பிரேமலதா விஜயகாந்த் பதில்

 

சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அதிமுகவுக்கும் எங்களுக்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் கூட்டணி குறித்து அப்போது முடிவு எடுக்கப்படும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசல் என அந்த மாதிரி எதுவும் இல்லை. ஆலோசகர் வைப்பதால் மட்டும் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற முடியாது. அது அந்தந்த கட்சியின் வியூகம். விஜயகாந்தை பொறுத்தவரை மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் களமிறங்குவார். அந்த ஆலோசகரே அவருடைய மாநிலத்தில் வெற்றி பெற்றாரா என்பது கேள்வி..?” எனக் கேள்வி எழுப்பினார்.


மாநிலங்களவையில் எம்பி சீட் தர முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அண்மையில் சத்தியம் வெல்லும், நாளை நமதே என பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.