×

போட்டோ சூட் ஆட்சி தான் நடக்குது- பிரேமலதா விஜயகாந்த்

 

தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை என்பது அன்றைய தின செய்தியாக மட்டுமே உள்ளது, அதன் பின்னர் என்ன செய்தார்கள் என்று சொல்ல மறுக்கின்றனர் என பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து  உடல்நிலை பாதிக்கப்பட்டு முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில்  சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தமிழ்நாட்டில் குடியை ஒழிக்க வேண்டும் என்பது தான் சிகிச்சை பெற்று வரும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அரசு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அதனை வரவேற்கிறேன். முழு நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர்  காவல்துறையினரை கட்டுப்பாடக வைத்துக்கொள்ள வேண்டும், காவல்துறைக்கு தெரியாமல் மது விற்பனை நடைப்பெறாது. அரசின் தவறை மறைக்கவே ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டோஷூட் ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டாலின் மகன் மீதும் மருமகன் மீதும் பலி வந்துள்ளது. ஆனால் இது குறித்து ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியிலும் இதுபோன்று கள்ளச்சாராய இறப்பு நடைப்பெற்று உள்ளது. அதை மறுக்க முடியாது. தமிழகத்தில் ஜீ ஸ்கொயர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து அவர்கள் தெரிவிப்பதில்லை. அது அன்றைய தினம் ஒரு முக்கிய செய்தியாக மட்டும் உள்ளது. அதனுடைய பின்புலங்கள் வெளியில் தெரிவதில்லை. தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து  சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஆவடி நாசரை நீக்கம் செய்தது தவறு” என தெரிவித்தார்.