×

வம்படியாக இளங்கோவனை பல கோடி கொடுத்து நிற்க வைத்தனர்! இன்று அவருக்கு நெஞ்சுவலி- பிரேமலதா

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நீட் பிரச்சனையை நேற்று முடித்து விட்டனர். ஒரு கட்டடத்திற்கு அனிதாவின் பெயர் வைத்தவுடன் நீட் பிரச்சனை முடிந்து விட்டது என்று அவர்கள் நினைக்கின்றனர். இது நிச்சயம் கண்டனத்துக்குரிய விஷயம். ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் பெயர் வைத்து விட வேண்டியது, சிலை திறந்து விட வேண்டியது. இதுபோல் செய்துவிட்டால் அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி ஆகி விடும் என்று நினைக்கின்றனர். இது கண்துடைப்பு நாடகம். நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. நீதிமன்றமே சொல்லிவிட்டது இதை தடை செய்ய முடியாது என்று. இருந்தாலும் இவர்கள்தான் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது நீட் தேர்வை ஒழிப்போம், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்று அவர்கள் தான் சொல்லிக்கொண்டு வருகின்றனர். 

இதை வைத்து அரசியல் செய்தார்கள், ஆட்சிக்கு வந்தார்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வது தான் என்றும் தெரிவித்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. நீட் தேர்வை அவர்களால் ரத்து செய்ய முடியாது. இனியும் முடியுமா? என்றால் அது மிகப்பெரிய கேள்வி குறிதான். அதனால் இதை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் குழப்பாமல் ஒரு நிலையான தெளிவான அறிவிப்பை அவர்கள் தர வேண்டும். அரசியல் செய்வதற்காக இதில் மர்மம் இருக்கின்றது என்றெல்லாம் கூறுகின்றனர். இதில் என்ன மர்மம் இருக்கிறது? இந்தியா முழுவதும் இந்த தேர்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்களால் இதை கையாள முடியவில்லை என்றால் மர்மம் இருப்பதாக கூறுகின்றனர், இது கண்டனத்துக்குறியது.


ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட பயந்து எத்தனையோ கட்சிகள் ஒதுங்கி நின்ற போது தைரியமாக தேர்தலை தேமுதிக எதிர்க்கொண்டு களத்தில் நின்று உள்ளோம். நேர்மையான முறையில் மக்களை சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதிகள் நடந்தது தேர்தலே அல்ல. இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நடந்த அத்தனை இடைத்தேர்தலையும் தனியாகவும் கூட்டணியுடனும் சந்தித்த கட்சி தேமுதிக. எல்லா தேர்தலையும் பார்த்துவிட்டு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. ஆனால் இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான அனுபவம். பட்டி அமைத்து ஆடு, மாடுகள் போல மக்களை அடைத்து வைத்து நடந்த தேர்தல். ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான தேர்தல். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ரொம்ப மோசமாக இருந்தது. தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து ஆதாரத்துடன் மனு கொடுத்தும் தேர்தல் அதிகாரிகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தனர். பின்னர் எதற்காக இடைத்தேர்தல் நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது? ஈவிகேஎஸ் இளங்கோவனை பல கோடிகள் கொடுத்து வாங்கி உள்ளனர். அவருக்கு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி என்றவுடன் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. அவர் முடியவில்லை என்று தெளிவாக கூறும் போது வம்பாக அவரை நிறுத்தி பல கோடிகள் கொட்டி செலவு செய்து முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு தேர்தல் அங்கு நடந்தது.

தேமுதிகவை பொறுத்தவரை ஆட்சியாளர்கள் நல்லது செய்தால் அதை வரவேற்போம். அதே நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு எதிரான போக்கை லஞ்சம் ஊழலை செய்து கொண்டு ஆட்சியை சரியாக செய்யவில்லை என்றால் தட்டிக் கேட்கின்ற முதல் கட்சி தேமுதிக தான். அதனால் எங்கள் பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம். திமுக கட்சி உறுப்பினர் உள்ளே தாக்குதல் நடத்துவதும், ஒரு பெண் பேராசிரியரை பிடித்து இழுத்து செல்வதும் தான் திராவிட மாடல்.‌ திமுக கட்சியினரே காவல் நிலையத்திற்கு சென்று ஒருவரை ஒருத்தர் தாக்கி கொள்கின்றனர். மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் செல்லும் பொழுது அவர்கள் கட்சியினரே சாலையில் நின்று மறியல் செய்கின்றனர். 

அமைச்சர்கள் அத்தனை பேரும் மக்கள் முகம் சுளிக்க கூடிய அளவிற்கு அவர்களது போக்கு உள்ளது. இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கின்றனர். ஏடிஎம் கொள்ளை, சங்கிலி பறிப்பு என அனைத்தும் இருக்கிறது. கேட்டால் இது திராவிட மாடல் என்று பெருமை பேசும் திமுக இதைப்பற்றி யோசிக்க வேண்டும். உறுதியாக இரும்புக்கரம் கொண்டு இதனை அடக்க வேண்டும். முதலில் அவர்கள் கட்சியினரை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் நிச்சயமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்”  என்றார்.