தவெகவிற்கு ஆதரவளிக்க போவதில்லை - பிரேமலதா திட்டவட்டம்...!!
May 11, 2026, 14:35 IST
சட்டசபை வளாகத்தில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளேன். என்னை வெற்றிபெற வைத்த விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சிதலைவர் ஸ்டாலினுக்கும், அனைவருக்கும் நன்றிகள். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குகிறேன். விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவேன்.
முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். விஜய்க்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு உரிய அவகாசம் கொடுப்போம். அதன் பிறகு மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம்.
கஜானா காலியாகிவிட்டது என்று முதலமைச்சராக பதவியேற்ற விஜய் சொல்லியுள்ளார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கான நேரத்தை கொடுத்துவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்கான குரல் நிச்சயம் சட்டமன்றத்தில் பதிய வைப்போம். தமிழக மக்களுக்கு நல்லது நடைபெறும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் சார்ந்துள்ள மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பில் என் வாக்கை பதிவு செய்வேன். நான் மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் வேட்பாளராக தான் விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன். எனவே நான் வெற்றி பெற்ற என் கூட்டணிக்கு ஆதரவாக தான் என்னுடைய நிலைப்பாட்டை எடுப்பேன். இதுதான் தேமுதிக நிலைப்பாடு. நாளைக்கு என்ன நடக்கும் என்பது இன்றைக்கே யாரும் கணிக்க முடியாது.