☰
×

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா பதவியேற்பு

 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடனேயே துறையின் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வழக்குகள், புதிய புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் குறைந்திருந்த நிலையில், இனி அரசு அலுவலகங்களில் திடீர் சோதனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் வாட்ஸ்அப், ஆன்லைன் புகார் முறையை இன்னும் வெளிப்படையாகவும், வேகமாகவும் மாற்றுவார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சாதாரண கிளார்க் முதல் உயர் அதிகாரிகள் வரை பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ஊழல் வழக்குகளை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் கவனம் செலுத்தவே தமிழக அரசு இவரை நியமித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகள் இன்னும் வெளிப்படையாக இருக்கும் எனவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.