சேலத்தில் 2 வாரங்களாக காணாமல் போன கர்ப்பிணி சடலமாக மீட்பு..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி காணாமல் போன கர்ப்பிணி கோகிலா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகிலா காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, சுமார் 2 வாரங்களுக்குப் பிறகு கோகிலாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோண சமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (23). இவர், படித்துவிட்டு திருமணம் ஆகாமல் வீட்டிலிருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறியதால் பெற்றோர் சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கர்ப்பத்திற்கு காரணமான கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசியை சங்ககிரி மகளிர் காவல் நிலையம் வரவைத்து விசாரணை மேற்கொண்டு அம்மாசியோடு கோகிலாவையும் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை கோகிலா காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பேராக் கவுண்டரிடம் அம்மாசி கூறியதை தொடர்ந்து பேராக் கவுண்டர் தனது மகள் கோகிலா காணவில்லை என கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கிணற்றை பார்த்தபோது வெள்ளை நிற சாக்குப்பையில் கட்டிய நிலையில் மூட்டை மிதந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொங்கணாபுரம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் எடப்பாடி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு விவசாய கிணற்றில் கிடந்த மூட்டையை வெளியே எடுத்து பார்த்தபோது பெண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பெண் கோகிலவாக இருக்குமோ? என்று அவரது உறவினர்களை வரவழைத்து பார்த்தபோது திருமணமாகாமலேயே 7 மாத கர்ப்பிணியான பெண் கோகிலா என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகிலாவின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்தச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.