இப்போதைக்கு மின்கட்டணத்தை உயர்த்தப்படாது - அமைச்சர் நிர்மல் குமார்..!
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
மின்சாரத் துறையில் செய்யப்பட வேண்டிய செயல்முறைகள் குறித்து கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறோம். டெண்டர் முறையில் பின்பற்றப்படும் நடைமுறை, நிலக்கரி எங்கிருந்து வாங்கப்படுகிறது என்றெல்லாம் ஆய்வு செய்கிறோம்.
தவறு, விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்படும் இடங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்தவித முறைகேடுகள் இல்லாமல் லஞ்சமும் இல்லாமல் மின்சாரத் துறை செயல்படும்" என்றார்.கடந்த சில தினங்களாக ஏற்படும் மின்தடை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "160-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட குழிகள் காரணமாக வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.
மின்தடை ஏற்பட்டால், மின்சார வாரியத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்தால், கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
அடிப்படையில் இருந்து சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடக்கும். டெண்டர் முறைகேடு புகார் காரணமாக சஸ்பென்ட் செய்த நபர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இது போன்ற நபர்கள் இந்த வளாகத்திற்குள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெண்டர் நடைமுறையில் மறைமுக டீலிங் இருக்காது. யாரும் துண்டு சீட்டில் எழுதி குடுத்து செயல்பட முடியாது. டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்து யார் மீது குற்றம் இருந்தாலும் தவறு செய்திருந்தாலும் முன்னாள் அமைச்சராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், "மின்வாரியத்தில் முதல் கட்ட சீரமைப்பு செய்யப்படும். 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர்தான் பணியாற்றி வருகிறார்கள். தற்போது மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் மாற்றம் இல்லை என்றார்.