மின்சாரத்துறை சார்ந்த அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின்சாரம் துண்டிப்பு..!
மின்சாரத்துறை சார்ந்த அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சற்றே பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
மதுரை அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்பு உரையாற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அரங்கு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும், பேராசிரியர்களும் நிறைந்திருந்த அந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதி ஏடி.ஜெகதீஷ்சந்திரா பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த அரங்கு இருளில் மூழ்கியதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சில நிமிடங்களில் மின்சாரம் மீண்டும் வந்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி தனது பேச்சை தொடங்கினார். தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று தினம் தோறும் அமைச்சர் நிர்மல்குமார் கூறி வரும் நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலே மின் தடை ஏற்படுகிறதே என்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகள் முனுமுனுத்தையும் பார்க்க முடிந்தது.
முன்னதாக, இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம், மதுராந்தகம் தொகுதியிலும் மின்வெட்டு ஏற்படுவது தவெகவினர் மத்தியிலே தர்மசங்கடத்தை எற்படுத்தியது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்ற தவெக முகவர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசும் போது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. உடனே அப்செட் ஆன ஆதவ், ஜெனரேட்டரை ஆன் செய்யுங்கள் என்றார். சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. அதேபோல, தாராபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் மின்வெட்டு ஏற்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின.