×

"தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு" - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!
 

 

தமிழகத்தில்  அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக  அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 50 சதவீத பொது போக்குவரத்திற்கு இந்த நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இவ்வாறாக கட்டுப்படுத்தும் ஒரே நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. 

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எழுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும்,  கல்லூரிகளில் செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது தேர்வுக்காக தான் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே எந்த கல்லூரியும் திறக்கக்கூடாது . இதை மீறி கல்லூரி நடத்தப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுக்காக விடுமுறை விடப்பட்டுள்ள கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெரிவிக்கப்படும் என்றார்.