☰
×

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் திட்டம் அக்.11ம் தேதி திறப்பு?

 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 118.1 கி.மீ. தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் முதற்கட்டமாக, வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 14.6 கி.மீ. வழித்தட மெட்ரோ பணிகள் முடிவடைந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான தேதியை இறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு மெட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், சட்டமன்றத் தேர்தல், புதிய அரசு பதவியேற்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த வழித்தடத்தின் தொடக்க தேதி தொடர்ந்து தள்ளிப் போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில், வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும் தேதி தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் 11 ரயில் நிலையங்களுடன் இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், பின்னர் கூடுதலாக 6 ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நின்று செல்லும் ரயில் நிலையங்கள்

இந்த மெட்ரோ ரயிலானது பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு, வடபழனி ஆகிய 11 நிலையங்களில் இந்த மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும்‌.

அதே சமயத்தில், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிடங்கு, சாலிகிராமம் ஆகிய 6 நிலையங்களின் பணிகள் நிறைவடையாததால் இந்த ரயில் நிலையங்களில் இந்த மெட்ரோ ரயில்கள் நிற்காது.

இந்த வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது வடபழனியில் இருந்து பூந்தமல்லிக்கு பைக், கார் அல்லது பேருந்தில் செல்ல குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை ஆகும். ஆனால், இந்த மெட்ரோ ரயில் மூலம் இந்த பயண நேரம் வெறும் 25 நிமிடங்களாக குறையும்.