தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை- பொன்னையன்
மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது. தண்டையார்பேட்டையில் இருந்து பேரணியாக சென்று தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். சுனாமி குடியிருப்பு மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், “திமுக ஆட்சியை அகற்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகிய இரண்டு உடன் பிறந்த சகோதரர்கள் ஒன்றிணைந்துள்ளார்கள். தேமுதிக ஓபிஎஸ் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு பொறுத்திருந்து பாருங்கள். அரசியலில் சூழல்கள் மாறும், எங்கு சென்றாலும் பாசங்கள் மீண்டும் ஒன்றிணையம். எடப்பாடி தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரட்டை இலை வெற்றி பெறும். டிடிவி தினகரன் எடப்பாடிக்காக பிரச்சாரம் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
எடப்பாடியார் தனித்த வெற்றிக்கு பாடுபட டிடிவி தினகரன் சூளூரைத் திருக்கின்றார். கண்டிப்பாக பிரச்சாரம் செய்வார் நாங்கள் வெற்றி பெறுவோம். கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை, இரட்டை இலை சின்னம் தனியாக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என்று நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். இரட்டை இலை சின்னத்தில் தனியாக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம்” என்று தெரிவித்தார்