☰
×

467 தொழிற்சாலைகளுக்கு செக்- மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி

 

467 தொழிற்சாலைகளுக்கு செக்- மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடிசுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக கடந்த 5 மாதங்களில் 467 தொழிற்சாலைகள் மீது மூடுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் உத்தரவுகளை மாசுக்கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் ஆய்வு மற்றும் அறிவுறுத்தலின் படி, விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதற்காக, மொத்தம் 467 தொழிற்சாலைகளுக்கு மூடல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றுதல்,  இசைவாணை (Consent) பெறாமல் தொழிற்சாலையை இயக்குதல்,  நிர்ணயிக்கப்பட்ட புகை வெளியேற்றம் மற்றும் கழிவுநீர் வெளியேற்ற தரநிலைகளைப் பின்பற்ற தவறுதல், சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ நிபந்தனைகளை மீறுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சட்டங்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்தல், மாசுபாட்டைத் தடுத்தல், காற்று, நீர் மற்றும் நிலத்தின் தரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல், மற்றும் பொதுமக்களின் உடல்நலத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மாநிலம் முழுவதும் நிலையான தொழில் வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து ஆய்வுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் சட்டங்களின்படி விதிமுறைகளைப் பின்பற்றாத மற்றும் இசைவாணையின்றி செயல்படும் தொழிற்சாலைகள் மீது எந்த ஒரு பாரபட்சமுமின்றி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.