×

“சேலம் பொதுக்கூட்டம் விஜய் தனது கிளாமரை காட்டுவதற்காக நடத்தப்படுகிறது”- பொள்ளாச்சி ஜெயராமன்

 

ஆளே இல்லாத கட்சி கூட, பொதுக் கூட்டம் நடத்தினால் கூட்டம் வரத்தான் செய்யும் என தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தை பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம் செய்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை சந்தித்து அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து, அதிமுக ஆட்சி அமைந்த உடன் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் இது தொடர்பாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மூலம் சட்டசபையில் எடுத்துரைப்பாகவும் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், “தமிழகம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை அழைத்து கோரிக்கைகளை கேட்கவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்கள் மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை. நாளை சேலத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டமானது, கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஒன்று. ஆளே இல்லாத கட்சி பொது கூட்டம் கூட்டினால் கூட பொதுமக்கள் கூட்டம் வரத்தான் செய்யும். தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தால் மட்டுமே அவர்களுக்கு நல்லது. 

தவெகவினர் கூட்டத்தின் மூலம் வலிமையை காட்டுவதையே நோக்கமாக வைத்து செயல்படுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை நாங்கள் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம். 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம். எங்களுக்கு தெருமுனைப் பிரச்சாரம் கை கொடுத்துள்ளது. செல்லும் இடங்கள் எல்லாம் 200 என 300 என அதிகமான மக்கள் கூடுகிறார்கள். தவெக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் என்பது விஜய் தனது கிளாமரை காட்டுவதற்காகவே நடத்தப்படும் கூட்டம்” என தெரிவித்தார்.