ஸ்டாலினை பார்க்க கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறல்
தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2.44 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கும் பிரமாண்ட நிகழ்ச்சி காலையில் நடைபெற்றது.
இதற்காக நேற்று இரவு நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்கினார். அதனைத் தொடர்ந்து காலையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அரசு நிகழ்ச்சி முடிந்ததும் தென்காசி ஆய்க்குடி சேவா சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்த முதல்வர் அவர்களோடு பேசி மகிழ்ந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் மதிய நேரத்தில் ஓய்வு எடுவதற்காக முதல்வர் ஸ்டாலின் குற்றாலம் அரசினர் தங்கும் விடுதிக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, கீதாஜிவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உள்ளிட்ட பலரோடு தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
அந்த நேரத்தில் முதல்வரை பார்ப்பதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் குற்றாலம் அரசினர் தங்கும் விடுதி முன்பு குவிய ஆரம்பித்தனர். காவல்துறையினர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார் இந்த நேரத்தில் வருவாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடையை மீறி நிர்வாகிகள் ஏராளமானோர் அரசினர் விடுதிக்குள் புகுந்தனர். ஆலோசனை முடிந்து வெளியே வந்த முதல்வரை சந்தித்த நிர்வாகிகள் ஏராளமானோர் அவருக்கு புத்தகங்கள் பூச்செண்டு வழங்கி அவரோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மாலை 6:20 மணிக்கு சரியாக முதல்வரின் வாகனம் குற்றாலம் தங்கும் விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை புறப்பட்டது. நாளை மதுரையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.