துணை முதல்வரின் படத்தை கிழித்த பாமகவினர் 3 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!
வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அன்புமணிக்கு பாமக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, பின்தங்கிய சமுதாயமாக வன்னியர் சமூகத்தை முன்னேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது முதல் கட்ட போராட்டம்தான். வன்னியர்கள் இந்த தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். வன்னியர்கள் 23 பேர் திமுகவில் எம்எல்ஏவாக உள்ளனர். அதில் 4 அமைச்சர்கள் உள்ளனர். 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு கொஞ்சமாவது உணர்வு இருக்கிறதா? என கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். இது சமூகநீதி பிரச்சினை. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என ஆவேசமாக தெரிவித்தார்.
இதனிடையே பாமக போராட்டத்தின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக பேனரில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்த்தின் மீது காலணியை வீசியது மட்டுமல்லாமல் அந்த பேனரை கிழித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாமகவை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.