நெல்லையில் மேலும் ஒரு குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்!
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் சாலையில் சென்றவர்களை கடந்த இரண்டு நாட்களாக அரிவாளால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் ஒருவரை நெல்லை மாவட்ட காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
தென்காசி மாவட்டம் நெட்டூரைச் சேர்ந்த அய்யப்பன், நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த வடக்கு அரியநாயகிபுரம் அருகே அரசங்குளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அய்யப்பன், அரிவாளால் காவல்துறையினரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் தலைமை காவலர் முத்துக்குமார் என்பவருக்கு கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் அய்யப்பனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது வலது காலில் குண்டு காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். காயமடைந்த அய்யப்பன் மற்றும் தலைமை காவலர் முத்துக்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கைதான அய்யப்பன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அவர் மீது சரித்திரக் குற்றப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்