☰
×

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை..!!

 

திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பாலமேடு, அலங்காநல்லூர் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டியதாக புகார் எழுந்ததை அடுத்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த பி. மூர்த்தியின் வீட்டில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுச் சோதனை நடைபெற்று வருவது மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில், அரசு விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகச் செம்மண் மற்றும் கற்களை வெட்டி எடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, ஐயர் பங்களா பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் இல்லத்திற்குச் சென்ற மாவட்டக் குற்றப்பிரிவு அதிகாரிகள், கல்குவாரி டெண்டர் தொடர்பான கோப்புகள், நிதிப் பரிவர்த்தனைப் பதிவேடுகள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சோதனை நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன்பாக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.