×

மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

 

திண்டிவனம் தொகுதியில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாமக வேட்பாளராக தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு செப்டம்பர் எட்டாம் தேதியன்று நடந்தது. குறைந்த வாக்கு எண்ணிக்கையில் சி.வி.சண்முகம் வெற்றிபெற்றார். வாக்குப்பதிவு முடிந்தவுடன் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு அமர்ந்திருந்தார்.

அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த ஒரு கும்பல் சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய முயற்சி செய்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட சண்முகம் அங்கு நின்ற காருக்குள் புகுந்து உயிர் தப்பிவிட்டார். இருப்பினும் சண்முகத்தைக் கொலைசெய்ய விடாமல் தடுத்த அதிமுக தொண்டர் முருகானந்தத்தை அந்த மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இது பாமகவினர் வேலை தான் என சந்தேகித்த சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, கருணாநிதி உள்ளிட்ட 21 பேர் மீது ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால் ராமதாஸ், அன்புமணி, கருணாநிதி ஆகியோரை தவிர்த்து 15 பேர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வட தமிழ்நாட்டில் இவ்விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்தது. இது ஒருபுறம் இருக்க அப்போது இருந்து உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சி.வி.சண்முகத்துக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இந்தப் பாதுகாப்பு இப்போது வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.