×

ஆளை மாற்றி தூக்கிட்டோம்! கடத்தியவரை அதே இடத்தில் விட்டுசென்ற போலீசார்!

 

மணப்பாறை அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பல்பொருள் அங்காடி உரிமையாளர்கள் 10 மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற சந்திரசேகர் (40). இவர் அமயபுரம் பகுதியில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இவரது மைத்துனர் சரவணகுமார். இவர் ஒத்தகடையில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை சரவணகுமாரின் பல்பொருள் அங்காடிக்கு காரில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர்கள் தங்களை போலீசார் என்று கூறி அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தை நீங்கள் வந்து காண்பிக்க வேண்டும் என்று கூறி சரவணகுமாரை அழைத்துள்ளனர். அவர் வரமறுத்துவிட்ட நிலையில், இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ராஜா என்ற சந்திரசேகரிடம் 4 நபர்களும் தாங்கள் போலீசார் என்றும் விசாரணைக்காக காரில் ஏறும்படி கூறி ராஜாவை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சரவணகுமாரும் காரை பின்தொடர்ந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதால் இருவரது நிலையும் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரின் மனைவி ரேணுகாதேவி இதுதொடர்பாக வையம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது அதில் சம்மந்தப்பட்ட கார் கடந்து சென்றிருப்பது தெரியவந்தது. இருவரையும் அழைத்துச் சென்றது ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீசார் என்றும் ஒரு புகாரின் பேரில் விசாரணைக்காக  வந்தபோது இருவரையும் ஆட்களை மாற்றி அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. விசாரணையில் ஆட்களை மாற்றி அழைத்துவந்தது தெரியவந்ததால் ராஜா மற்றும் சரவணக்குமாரை விடுவிக்கவே இருவரையும் கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் உள்ள ஓரிடத்தில் இருந்த பெருந்துறை போலீசாரிடமிருந்து அவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பல்பொருள் அங்காடி உரிமையாளர்கள் இருவரும் இரவு 9.30 மணிக்கு விடுவிக்கப்பட்டதால் 10 மணி நேரமாக நடந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது.