"தவெக மாநாட்டுக்கு பைக்கில் வரக் கூடாது" - காவல்துறை அறிவுறுத்தல்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது.
தவெகவின் 2வது மாநில மாநாட்டுக்கு பைக்கில் வரக் கூடாது, கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெற்கில் இருந்து மாநாட்டிற்கு வர அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் பிரதான வழியாகும். மது்ரைக்குள் வராமல் வெளிவட்டச் சாலைகள் உள்ள வழித்தடங்களை பயன்படுத்தவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, வட மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி செல்லும் கனரக வாகனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக செல்ல வேண்டும். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரியில் இருந்து மதுரை மார்க்கமாக வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல், திருச்சி வழியாக செல்ல வேண்டும். சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி செல்லும் கனரக வாகனங்கள் உசிலம்பட்டி, பேரையூர் வழியாக செல்ல வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.