நீட் போராட்டத்தில் உணவு வழங்கிய தன்னார்வலர் மீது போலீஸ் அத்துமீறல் புகார்!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த முகமது ஜூனைத், ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராடி வந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் பசியைப் போக்கத் தனது சொந்த முயற்சியில் உணவுப் பொட்டலங்களையும் குடிநீரையும் விநியோகித்து வந்தார். இதனிடையே, காசியாபாத் மசூரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் நள்ளிரவில் அவரது வீட்டிற்குச் சென்று சோதனையிட்டதாகவும், ஜூனைதின் தந்தை முஸ்தபாவை அழைத்துச் சென்றதுடன் குடும்பத்தினரின் ஆதார் அட்டைகள் மற்றும் வங்கிப் புத்தகங்களைப் பறிமுதல் செய்து சென்றதாகவும் ஜூனைதின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போராட்ட அமைப்பாளர்களான காக்ரோச் ஜனதா கட்சியினர் (CJP) காவல்துறையின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “குற்றவாளிகளைத் தேடிப் பிடிப்பதற்குப் பதிலாக, அமைதியான முறையில் போராடும் மாணவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி உதவி செய்த தன்னார்வலரையும் அவரது குடும்பத்தினரையும் காவல்துறை துன்புறுத்துகிறது” எனச் சாடியுள்ள CJP தலைவர்கள், இந்த அத்துமீறலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அதேவேளையில், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காவல் துறை அதிகாரிகள், ஜூனைதின் குடும்பத்தினர் யாரையும் கைது செய்யவில்லை என்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளே எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும், ஜனநாயக ரீதியில் அறவழியில் போராடிய மாணவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர் மீது நடத்தப்பட்ட இந்த அச்சுறுத்தல் மற்றும் கெடுபிடி சம்பவங்கள் சமூக வலைத்தளங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.